தமிழகத்தில் வரலாறு காணாத வெயில்: 20 மாவட்டங்களில் சதம்
தமிழகத்தில் வரலாறு காணாத வெயில் அடித்து வருகிறது. 20 மாவட்டங்களில் சதம் அடித்தது
தமிழகத்தில் வரலாறு காணாத வெயில் கொளுத்தி வருகிறது. 20 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் சதம் அடித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் மிகவும் கடுமையாக உள்ளது. கோடை காலம் தொடக்கத்தில் ஒரு வார காலம் வெயில் 100 டிகிரிக்கு மேல் அடித்தது. அதன் பின்னர் வங்க கடலில் உருவான மோக்கா புயல் காரணமாக 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக கடந்த நான்காம் தேதி கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அன்றைய தினம் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வந்ததால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் குறைந்து மக்கள் ஓரளவு நிம்மதியாக இருந்தனர்.
இந்த நிலையில் மழை விடை பெற்றுவிட்டது .இதன் காரணமாக தற்போது மீண்டும் தமிழகத்தில் அனல் பறக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் அளவுபதிவாகி உள்ளது. அதேபோல திருச்சி, திருத்தணி, வேலூர், கரூர், அரியலூர், உள்பட 20 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்துள்ளது திருத்தணியில் 108 டிகிரி பதிவாகி இருப்பது போல வேலூரிலும் 108 டிகிரி பதிவாகியுள்ளது .
வெயில் அதிக அளவில் அடித்து வருவதால் மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்கள் வெயிலில் நடந்தால் மயக்க வந்து விடும் அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த கோடைகாலத்தில் வரலாறு காணாத வெயில் அடித்து வருவதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வெயிலின் தாக்கம் இவ்வளவு அதிகமாக மோக்கா புயலும் ஒரு காரணம் என்று வானியல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள். நிலப்பகுதியில் உள்ள ஈரத்தை அது உறிஞ்சி சென்று விட்டதாக தொழில்நுட்ப காரணம் கூறுகிறார்கள். அக்னி நட்சத்திரம் முடிவதற்கு இன்னும் ஒரு வார காலம் உள்ளது. அதுவரை வெயிலின் தாக்கம் இன்னும் கூடுதலாக இருக்கும் என வானிலை நிபுணர்களால் கணிக்கப்பட்டு உள்ளது.