வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னையில் வெள்ளப்பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை வருகிறார்.;

Update: 2023-12-06 14:10 GMT

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை வருகிறார்.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் மிக்ஜம் புயலாக மாறியதால் சென்னையில் இரண்டு நாட்கள் பலத்த மழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத வகையில் 73 சென்டிமீட்டருக்கும் மேலாக மழை பதிவானதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. முக்கிய சாலைகள் மட்டும் இன்றி சாதாரண தெருக்கள் வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

மிக்ஜம் புயல் சென்னையை விட்டு நகர்ந்து ஆந்திராவில் கரை கடந்துவிட்டாலும் அதனுடைய தாக்கம் என்னும் குறையவில்லை. தண்ணீர் வடியாததால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். தமிழக அரசு மீட்பு நடவடிக்கை எடுத்தாலும் மக்களை திருப்திப்படுத்த முடியவில்லை.

இந்த நிலையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரூ. 5200 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் ஏற்கனவே தொலைபேசியில் பேசி உள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி உத்தரவின்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். அவர் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருடன் ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News