'இறுதி வெற்றி நமக்கு தான்' மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ். பேச்சு
'இறுதி வெற்றி நமக்கு தான்' என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ். பரபரப்பாக பேசினார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் தலை தூக்கியது. இதன் காரணமாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் தனித்தனியாக செயல்பட தொடங்கினர்.
கடந்த ஜூலை மாதம் 11 ம் தேதி சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவர் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் அந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிரடியாக நீக்கியும் அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டம் செல்லாது. பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்கியதும் செல்லாது என தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார். மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீரப்பினை ரத்து செய்தும், எடப்பாடி பழனிசாமி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் தீர்ப்பு அளித்தனர்.
இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இருந்தாலும் அக்கட்சி எடப்பாடி பழனிசாமி கையில் இருப்பதாகவே கருதப்படுகிறது. ஆனாலும், ஓ.பன்னீர் செல்வம் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறார்.
அந்தவகையில் ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வின் 75 மாவட்டங்கள் மற்றும் இதர அணிகளில் தனது ஆதரவு நிர்வாகிகளை தனியாக நியமித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் தொடங்கி, அமைப்புச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், ஊராட்சி நிர்வாகிகள் வரை அனைவரையும் புதிதாக நியமித்தார். மேலும் கட்சியின் அரசியல் ஆலோசகராக அ.தி.மு.க. மூத்த முன்னோாடி முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை அறிவித்தார்.
இந்நிலையில் டிசம்பர் 21ம்தேதி ஓ.பி.எஸ். அணியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி இன்று சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 88 மாவட்டச் செயலாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது:-
பா.ஜ.க. நமக்கு உரிய மரியாதை வழங்கி வருகிறது. அதையே நாமும் அவர்களுக்கு செய்கிறோம்.அ.தி.மு.க.வில் தற்போது அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது. நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் முடிவு எடுக்கப்படும். தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்ட வரவு செலவு கணக்கு நான் பொருளாளராக இருந்தபோது கொடுத்தது தான். பொதுக்குழு முறையாக நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். இறுதி வெற்றி நமக்கு தான்.அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளும் ஒன்றாக இணைய கூடாது என்ற எண்ணம் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நமது தலைமையில் தான் கூட்டணி அமையும். தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் இரட்டை இலை சின்னத்தை நமக்கு தான் வழங்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் முறையாக நடக்கவில்லை. கூவத்தூரில் நடந்தது போல் தான் பொதுக்குழுவிலும் நடந்து உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.