திருநங்கைகளுக்கான இரண்டு நாள் சிறப்புப் பயிற்சி முகாம்

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியும், சமூக நலத்துறையும் இணைந்து நடத்துகிறது.;

Update: 2021-12-09 18:23 GMT

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியும், சமூக நலத்துறையும் இணைந்து திருநங்கைகளுக்கான இரண்டு நாட்கள் சிறப்புப் பயிற்சி முகாமை நடத்துகிறது.

திருநங்கைகளுக்கான இரண்டு நாட்கள் சிறப்புப் பயிற்சித் திட்டத்தினை வகுத்து, அப்பயிற்சி 9.12.2021 மற்றும் 10.12.2021 ஆகிய இரண்டு நாட்களில் சென்னை , அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முன் முயற்சியினாலும், ஆலோசனையின்படியும், வழிகாட்டுதலின்படியும், இந்தப் பயிற்சி முதன்முறையாக தமிழ்நாட்டில் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் நடத்தப்படுகிறது. சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் வங்கி கடனுதவி போன்ற ஆலோசனைகளை வழங்கியும் மற்றும் அவர்களின் திறன் மேம்பாட்டிற்காக இந்தப் பயிற்சி திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. தமிழ்நாடு மூன்றாம் பாலினத்தவரின் நல வாரியம் மற்றும் சமூக நலத்துறை ஆகியவை இந்த மூன்றாம் பாலினத்தவர் தினமும் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தொல்லைகள் குறித்தும் மற்றும் அவற்றினை எதிர்கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தப் பயிற்சி வகுப்பினை சமூக நலத்துறை இயக்குநர் ரத்னா துவக்கி வைத்து மூன்றாம் பாலினத்தவர்களை ஊக்குவித்து உறையாற்றினார். இந்தப் பயிற்சி வகுப்பில் லலிதா லட்சுமி , வித்யா தினகரன், ப்ரியா பாபு மற்றும் பலர் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கின்றனர். அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி சார்பில் கூடுதல் இயக்குநர் எஸ். இராஜேந்திரன், திட்ட மேலாளர் எம். சுந்தரராஜன் மற்றும் பயிற்சி இயக்குநர்கள் வி.சுலோச்சனா, ஜோசப் ராஜசேகரன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News