தமிழக அரசின் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர்கள் இருவர் திடீர் ராஜினாமா

தமிழக அரசின் கூடுதல் தலைமை அரசு வழக்கறிஞர்கள் இருவர் திடீர் என ராஜினாமா செய்து உள்ளனர்.

Update: 2024-01-24 16:36 GMT

தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் திடீர் என தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மொத்தம் 11 பேர் கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக இருந்த நிலையில் தற்போது இருவர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் சிலம்பண்ணன், அருண் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு பிளீடராக இருந்த பி.முத்துக்குமாரும் ராஜினாமா செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த  சண்முகசுந்தரம் அண்மையில்  தனது பதவியை  ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமன் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், மேலும் இருவர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜினாமா செய்தவர்களுக்கு மாற்றாக புதிதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், அரசு பிளீடரை தமிழ்நாடு அரசு நாளை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக அரசு வழக்கறிஞர்கள் பதவி என்பது அரசின் சார்பில் ஆஜராக கூடிய நபர்களாக இருப்பதால் அரசின் கொள்கை முடிவுகள் அவர்களுக்கு தெரிந்திருக்கும்.மேலும் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகள், அது தொடர்பான வழக்குகள் பற்றிய விவரங்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அரசை காப்பாற்ற வேண்டியதும் இவர்களது கடமை தான்.

அமைச்சர் பொன்முடி சென்னை உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட வழக்கில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய காரணத்தினால் தான் சண்முக சுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டது. 

தற்போது மேலும் இருவர் ராஜினாமா செய்ததற்கும் இதுபோல் ஏதாவது காரணம் இருக்கும் என தெரிகிறது. அரசு பிளீடர் ராஜினாமாவிற்கும் சரியான காரணம் தெரியவில்லை.

Tags:    

Similar News