தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம்: தினமும் 600 பயணிகளை கையாளலாம்
தூத்துக்குடி விமான நிலைய முனையம், 10,800 சதுர அடியில் 600 பயணிகளை கையாளும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.;
வேகமாக வளர்ந்து வரும் தூத்துக்குடியில் இருந்து, சென்னைக்கு தினமும் 3 விமானங்களும், வாரம் தோறும் பெங்களூருக்கு 3 விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில், ஒரே நேரத்தில் 80 பயணிகள் வந்து செல்லும் வகையில் தான் முனையம் உள்ளது. ஆனால், ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 400 முதல், 600 பேர் இங்கு பயணித்து வருகின்றனர்.
எனவே, தூத்துக்குடி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் 195 கோடியே 32 லட்சம் மதிப்பில் , 10,800 சதுரடியில் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, விமான ஓடுதளம் தற்போதுள்ள 30 மீட்டர் அகலம், 1349 மீட்டர் நீளம் என்பது, 45 மீட்டர் அகலம், 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளம் கொண்டதாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்தால், ஏ-321 வகை பெரிய விமானங்களும், தூத்துக்குடிக்கு வந்து செல்லலாம்.
விரிவாக்கப்பணிகளுக்கு பின்னர், ஒரே நேரத்தில் 600 பயணிகள் வந்து செல்ல முடியும். அத்துடன், முக்கிய பிரமுகர்கள் ஓய்வறை, பண பரிமாற்ற நிலையம், ஏடிஎம், உணவகம், மருந்தகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும், தூத்துக்குடி விமான நிலையத்தில் கிடைக்கும்.