தலைநகர் சென்னையில் திடீர் மழையால் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் கடும் அவதி..!
தலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்ததால் ஆங்காங்கே சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் பாதிப்பும் ஏற்பட்டது.
சென்னை நகருக்கு குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த சூழலில் சென்னை மக்களின் வெப்பத்தை தணித்து தொடர்ந்து பெய்யும் மழை மகிழ்வித்து வருகிறது. தெற்கு ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று மாலையில் பரவலாக மழை பெய்தது. கோடம்பாக்கம், அண்ணாநகர், சாலிகிராமம், கொரட்டூர், வளசரவாக்கம், கோயம்பேடு, அம்பத்தூர், மதுரவாயில் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர்.