தக்காளி விலை கிலோ ரூ.140க்கு விற்பனை: இல்லத்தரசிகள் பெரும் கவலை
தக்காளி விலை உயர்ந்து கிலோ ரூ.140க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால் இல்லத்தரசிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தக்காளி விலை சில நாட்களாக அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது. வெப்பம் மற்றும் கனமழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் தக்காளி வரத்து தற்போது குறைந்து காணப்படுகிறது. கடந்த மாத இறுதியில் ரூ.60 விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ திடீரென உயர்ந்தது.
மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும் தக்காளி விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதனால் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.65-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. நேற்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ100க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே இன்று தக்காளியின் விலை உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளது. மொத்த விற்பனை கடைகளில் கிலோ தக்காளி ரூ.100 ஐ தொட்டது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 90 ரூபாய்க்கு விற்ற தக்காளி, இன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை விலையில் ஒரு கிலோ 130 முதல் 140 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். காய்கறி மார்க்கெட்டுகளில் மக்கள் குறைவாகவே தக்காளியை வாங்கிச் செல்கின்றனர். மேலும் தக்காளி இல்லாத உணவை சமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது புளிப்பை உருவாக்கக்கூடிய புளி மற்றும் மாங்காய் மாற்றாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.