காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: 621 பணியிடங்களுக்கு 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டி
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இன்று எழுத்து தேர்வு நடை பெற்றது.;
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 129 நிலைய அதிகாரி பணியிடங்களுக்கும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இன்று எழுத்து தேர்வு நடை பெற்றது.
இது தொடர்பான அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. இதையடுத்து இளைஞர்களும், இளம் பெண்களும் தேர்வு எழுத, அந்த தேர்வு வாரிய இணையத்தளம் மூலம் விண்ணப்பித்தனர்.
இதில் தகுதியுடையவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மட்டும் தேர்வு கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. 1,45,804 இளைஞர்கள், 40,885 பெண்கள், 33 திருநங்கைகள் என மொத்தம் 1,86,722 பேர் எழுதவும் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
காவல்துறையைச் சார்ந்த விண்ணப்பதாரர்களில் 13,609 ஆண் காவலர்கள், 2,401 பெண் காவலர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 16,011 பேருக்கும் நுழைவுச் சீட்டு வழங்கப் பட்டிருந்தது.
எழுத்து தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 45 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதுவதற்கு 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பிரதான எழுத்து தேர்வு நடைபெற்றது. மாலை 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெறுகிறது.
காவல்துறையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இன்று மாலை 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் தகுதி தேர்வும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரையில் பிரதான எழுத்து தேர்வும் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகளும், அந்தந்த மாநகர, மாவட்ட காவல் துறை அதிகாரிகளும் இன்று தேர்வு நடந்த இடங்களில் தீவிரமாக கண்காணித்தனர். சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் தேர்வை எழுதினர். தேர்வு மையத்துக்குள் சென்றவர்கள் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
ஆண், பெண்களுக்கு தனித்தனி தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 621 பணியிடங்களுக்கு 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதி இருப்பதால் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.