நீட் தேர்வு விலக்கு மசோதா: கவர்னர் உறுதி தந்ததாக தமிழக அரசு தகவல்

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக கவர்னர் உறுதி அளித்துள்ளார் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-03-15 11:30 GMT

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கவர்னர் ஆர்.என் ரவியை இன்று சந்தித்து பேசினார். அப்போது, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு, முதல்வர் மு.க ஸ்டாலின், கவர்னரிடம் நேரில் வலியுறுத்தினார். நீட் தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம், 2021, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதை 142 நாட்களுக்குப் பிறகு கவனர் திருப்பி அனுப்பினார்.

வரும் 2022-2023ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்ப வேண்டும் என்று தமிழக கவர்னரை, முதல்வர் மு.க. ஸ்டாலின், நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

இதே போல், பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமையும் என்று, கவர்னரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியதாக, அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News