தமிழக மீனவர் படகுகள் அரசுடமை: இலங்கை நீதிமன்றம்
கடந்த ஆண்டு சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 17 படகுகளில் மூன்று படகுகளை அரசுடமையாக்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது;
மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் , இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்களை கைது செய்வதோடு, அவர்கள் பிடித்து வைத்துள்ள மீன்கள், வலைகள், படகுகள் போன்றவர்களையும் பறிமுதல் செய்துவிடுகின்றனர். அவ்வாறு தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகளை இலங்கை அரசு ஏலத்தில் விட்டுவிடுகிறது.
அவ்வாறு இல்லாவிட்டால், நடுக்கடலில் வைத்து மீனவர்களை தாக்கிவிட்டு , அவர்களது படகுகள், வலைகளை சேதப்படுத்துவது போன்றவையும் வழக்கமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் 2021, 2022 ஆம் ஆண்டுகளில் தமிழக மீனவர்களிடம் இருந்து 17 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டன. இந்த படகுகள் மீதான விசாரணை யாழ்ப்பாணம் மற்றும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. இதில் ஆஜராவதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் 14 பேர் கொண்ட தமிழக மீனவ குழுவினர் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.
கடந்த 26 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்க பொறுப்பாளர் ஜேசுராஜா தலைமையில், ராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதிகளைச் சேந்த மீனவர்கள் இலங்கைக்குச் சென்றனர். தங்களது வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு படகுகளை விடுவிக்கும்படி நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்க இருந்தனர்.
அதன்படி அந்த மீனவர்கள் நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி 17 படகுகளில் 4 படகுகள் மீதான விசாரணை முடித்து வைத்தனர். இதற்கான தீர்ப்பு வருகிற 31ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என்றும், மீதமுள்ள 10 படகுகள் மீதான வழக்குகளை மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், 3 விசை படகுகளை இலங்கை அரசுடைமையாக்குவதாகவும் உத்தரவிட்டுள்ளனர்.