வந்தவாசி அருகே 5 ஆயிரம் பனை விதைகளை நட்டு இளைஞர்கள் விழிப்புணர்வு
வந்தவாசி அருகே 5 ஆயிரம் பனை விதைகளை நட்டு இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கற்பகத்தரு என அழைக்கப்படும் பனை மரமானது நுங்கு, பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, பனம்பழம் என உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை அள்ளித் தருவதாகும். மேலும் நிலத்தடி நீரை பாதுகாப்பதில் பனைமரங்களுக்கு முக்கிய இடமுண்டு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடிக்க தொடங்கியபோது பல ஏக்கர் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறின. இதற்காக அந்த விளைநிலங்களிலிருந்த பனை மரங்கள் வேரோடு வெட்டப்பட்டன.
தமிழர் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த இந்த பனைமரங்கள் ஆயிரக்கணக்கில் வெட்டி சாய்க்கப்பட்டதின் தாக்கத்தை கடும் கோடைக் காலங்களின்போது மக்கள் உணரும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் பனைமரங்களை வெட்டுவதை தடுக்கவோ, புதிய மரங்களை வளர்க்கவோ முயற்சி பெருமளவில் எடுக்கப்படவில்லை என்றே கூறலாம்.
இந்த நிலையில் பனைமரத்தின் அவசியத்தை உணர்ந்த திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள மாலையிட்டான்குப்பம் கிராம இளைஞர்கள் அந்த கிராம ஏரியில் 5 ஆயிரம் பனை விதைகளை நடுவது என முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியில் பனை விதைகளை நடும் பணியை தொடங்கினர்.
அப்போது விதை நடும் பணியை பார்க்க வந்த கிராம மக்களுக்கு பணங்கற்கண்டு, பனைவெல்லம் ஆகியவற்றை கொடுத்து அவர்கள் வரவேற்றனர். இயற்கை வளம் காக்கும் இளைஞர்களின் முயற்சியை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.