வந்தவாசி அருகே இரு பிரிவினரிடையே கோஷ்டி மோதல்.. சாலை மறியல்

வந்தவாசி அருகே கோயிலை ஒரு பிரிவினர் சொந்தம் கொண்டாடுவதை கண்டித்து மற்றொரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-04 06:59 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த குறிப்பேடு கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒரு சமுதாயத்தினர் சொந்தம் கொண்டாடி பூஜை மற்றும் அபிஷேகங்கள் செய்து வருகின்றனர். கிராம பொதுமக்கள் கோவிலுக்கு சென்றால் அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்ய மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குறிப்பேடு கிராமமக்கள் முத்தாலம்மன் கோவிலை அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மேல்மருவத்தூர்- வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள கீழ்சீசமங்கலம் கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்ததும் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, வந்தவாசி இன்ஸ்பெக்டர் குமார், கீழ்கொடுங்கலூர் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் துணை தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியல் காரணமாக காலை சுமார் 1 மணி நேரம் வந்தவாசி-மேல்மருவத்தூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News