வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது . இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் கோயில் தேர் சேதமடைந்ததால் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில், தமிழக அரசு நிதி, பொதுமக்கள் பங்களிப்புடன் ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலுக்கு புதிய மரத் தேர் செய்யும் பணி நடைபெற்று வந்தது. தற்போது, தேர் செய்யும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தேரின் வெள்ளோட்டம் வந்தவாசி நகரில் நடைபெற்றது.
அதன்படி, ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்று வெள்ளோட்டம் நடைபெற்றது. பஜாா் வீதி, அச்சிரப்பாக்கம் சாலை, பாலுடையாா் தெரு, சன்னதி தெரு ஆகிய மாட வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் தயாரிப்பு கூடத்தை அடைந்தது. நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், தேர் திருப்பணிக் குழுவினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.
கோயில் தேரோட்டம்: முன்னேற்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வட்டாட்சியா் உத்தரவு
திருவண்ணாமலை அருகேயுள்ள ஸ்ரீபோா் மன்னலிங்கேஸ்வரா் கோயில் தேர்த் திருவிழாவுக்கான முன்னேற்பாட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வட்டாட்சியா் தியாகராஜன் உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் பழைமையான ஸ்ரீபோா் மன்னலிங்கேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் தேர்த் திருவிழா பிப்.27-ஆம் தேதி நடைபெறுகிறது.
திருவிழாவை சிறப்பான முறையில் நடத்துவது, முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருவண்ணாமலை வட்டாட்சியா் தியாகராஜன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் மங்கலம் பிரபாகரன், விழாக்குழுத் தலைவா் மணி, பொருளாளா் சிவக்குமாா், துணைத் தலைவா் நரசிம்மன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், பிப்.23-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும் திருக் குடமுழுக்கு, தேர்த் திருவிழாவுக்கு அடிப்படை வசதிகளான குடிநீா், கழிப்பறை வசதிகளை செய்வது, துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது, அன்னதானம் வழங்கும் இடங்களை தோவு செய்வது, சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைப்பது, பக்தா்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை ஆய்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என வட்டாட்சியா் தியாகராஜன் உத்தரவிட்டாா். இதில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.