வந்தவாசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
வந்தவாசியில் ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்பட்டதை கண்டித்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ரூ.83.76 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை வரை வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் 27-ந் தேதி (புதன்கிழமை) மாலை வரை பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இந்த ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்படுவதாக ஒன்றிய நிர்வாகம் இன்று அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டியது.
இதனால் ஆத்திரமடைந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினுள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். துணைத்தலைவர் ஆர்.விஜயன் தலைமையில் ஒன்றியக்குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் 5 பெண் ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த ஒப்பந்தப்புள்ளி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தப்புள்ளி படிவங்களை வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழித்தனர். இப்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றனர். ஒப்பந்தப்புள்ளி தள்ளி வைக்கப்பட்டதற்கான உண்மையான காரணத்தை அவர்கள் தெரிவிக்க மறுக்கின்றனர். எனவே ஒப்பந்தப்புள்ளி ஒத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் அங்கு சென்று அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.