வந்தவாசி நகராட்சி கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்!
நகராட்சி ஆணையாளரின் நடவடிக்கையை கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் மாலை 6:30 மணியளவில் ஆணையாளர் மகேஸ்வரி அலுவலகத்தில் இருந்தார். அப்போது அவரது அறைக்கு சென்ற 19 வது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன் தெருவிளக்கு எரியாதது குறித்து புகார் செய்தார். புகார் குறித்து பதிவேட்டில் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் என ஆணையாளர் கூறியதாக சொல்லப்படுகிறது.
எனக்கு உரிய பதில் அளித்தால் தான் இங்கிருந்து புறப்படுவேன் என கவுன்சிலர் கூறியுள்ளார். அதற்கு ஆணையாளர் மற்ற வேலைகள் எனக்கு உள்ளன. நீங்கள் வெளியே செல்லுங்கள் எனக் கூறினாராம். என்னை வேலை செய்ய விடாமல் தடுத்தால் நான் காவல் நிலையத்தில் புகார் செய்வேன் எனக் கூறிவிட்டு அறையில் இருந்து புறப்பட்டு வெளியே வந்த ஆணையாளர் மேலாளர் இருக்கை அருகே அமர்ந்து கோப்புகளை பார்த்துள்ளார்.
அப்போது இங்கு வந்து அதிமுக பெண் கவுன்சிலர் தீபாவின் கணவர் செந்தில்குமார் தெருவிளக்கு நகரம் முழுவதும் எரியவில்லை என புகார் செய்ய வந்தவரை எப்படி வெளியே செல்லுங்கள் என சொல்லலாம் என கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நகரத்தில் எங்கெங்கு தெரு விளக்கு எரியவில்லை என பொறியாளர் சரவணனுடன் ஆய்வு செய்ய ஆணையாளர் புறப்பட்டு வெளியே சென்றார். அப்போது மயக்கம் ஏற்பட்டதால் பொறியாளர் சரவணன் உடனடியாக ஆரணி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆணையாளரை சேர்த்தார்.
கவுன்சிலரை ஒருமையில் பேசிய சம்பவத்தை கண்டித்து கவுன்சிலர்கள் நாகூர் மீரான், நூறு முகமது, அன்பரசு, மகேந்திரன், சரவணகுமார் ,சந்தோஷ்குமார், ராமஜெயம், மற்றும் பெண் கவுன்சிலரின் கணவர்கள் ஆணையாளர் இருக்கை முன்பாக உள்ள நாற்காலியில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார், நகராட்சி தலைவர் ஜலால், துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கவுன்சிலர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். நகர மன்றத்தை மதிக்காமல் செயல்படும் ஆணையாளர் தேவையில்லை அவரை மாற்றினால் தான் இங்கிருந்து புறப்படுவோம் என கவுன்சிலர்கள் கூறினர்.
இதனைத் தொடர்ந்து ஆணையாளரிடம் எம் எல் ஏ தொடர்பு கொண்டு பேசினார்.
பின்னர் வேலூர் மண்டல நிர்வாக ஆணையாளரை எம்எல்ஏ தொடர்பு கொண்டு பிரச்சனை குறித்து பேசினார் . அவர் உடனடியாக இதற்கு தீர்வு காண்பதாக உறுதியளித்ததின் பேரில் உள்ளிருப்பு போராட்டத்தை கவுன்சிலர்கள் முடித்துக் கொண்டனர்
சிறிது நேரம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.