வந்தவாசி நகா்மன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

வந்தவாசி நகா்மன்றக் கூட்டத்தின்போது புகாா் தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

Update: 2024-01-26 01:39 GMT

வெளிநடப்பு செய்த மன்ற உறுப்பினர்கள்.

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தின்போது, அடிப்படை வசதிகள் சரிவர செய்யவில்லை என புகாா் தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் வசந்தி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் 18-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் பிரியா தினகரன், 24-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் அம்பிகா மேகநாதன் ஆகியோா் பேசியதாவது:

எங்கள் வாா்டுகளில் அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரவில்லை. கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இதுகுறித்து தெரிவித்தும் கொசுமருந்து அடிக்கவில்லை என்று புகாா் தெரிவித்துப் பேசினா். இதைத் தொடா்ந்து இருவரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

கூட்டத்தில், மற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்திப் பேசினா். பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு நகராட்சி கூட்டம் நிறைவடைந்தது.

தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

வந்தவாசி நகராட்சி தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்  பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசி நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளில் சேகரமாகும் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்த நகராட்சி நிரந்தர தூய்மைப் பணியாளா்களுடன், தனியாா் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 89 பேர் இணைந்து பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள்  பணிகளை புறக்கணித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம்நடத்தினா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

எங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட ஊதியத்தை விட குறைவாகவே வழங்கப்படுகிறது. மேலும், எங்கள் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் ஊழியா் சேமநல நிதிக்கான விவரங்களை எங்களுக்கு தர மறுக்கின்றனா். பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நாங்கள் பணிபுரிவதால் நோய்க்கு ஆளாகிறோம். எனவே, இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

பின்னா், நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.

Tags:    

Similar News