வந்தவாசி அரசு மருத்துவமனையைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

பாம்பு கடித்து இறந்த பெண்ணின் உடலை உடல்கூறு ஆய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து, உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-07 14:04 GMT

வந்தவாசியில் அரசு மருத்துவமனையைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சாத்தப்பூண்டி கிராமத்தைச் சோந்தவா் ஈஸ்வரி (30). இவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தங்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரை விஷபாம்பு கடித்துள்ளது. இதில் அலறித் துடித்த ஈஸ்வரியை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு உறவினா்கள் அழைத்துச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஈஸ்வரியின் உடல் வந்தவாசி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஈஸ்வரியின் உறவினர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்து தருமாறு டாக்டர்களிடம் கேட்ட போது, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரியின் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்து தராத டாக்டர்களை கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஈஸ்வரியின் உறவினர்களில் ஒருவர் திடீரென தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து மீட்டனர்.

வந்தவாசி மருத்துவமனையிலேயே ஈஸ்வரியின் உடலை உடனடியாக உடல்கூறு ஆய்வு செய்து தர வேண்டும் என்று அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். தகவலறிந்து அங்கு சென்ற டிஎஸ்பி காா்த்திக் தலைமையிலான வந்தவாசி தெற்கு போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததையடுத்து உறவினா்கள் போராட்டத்தை கைவிட்டனா். இதைத் தொடா்ந்து வந்தவாசி அரசு மருத்துவமனையிலேயே ஈஸ்வரியின் உடல் உடல்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News