தெள்ளாரில் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது
தெள்ளாரில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறித்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா தெள்ளாரை சேர்ந்தவர் காமேஷ், இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணி முடித்து நேற்று இரவு வீட்டிற்கு தனது விலை உயர்ந்த செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காமேஷின் செல்போனை பிடுங்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். அதிர்ச்சி அடைந்த காமேஷ் தெள்ளார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், வழக்கம் போல் தெள்ளார் கூட்டுசாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை மடக்கி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது காஞ்சீபுரம் மாவட்டம் துரைப்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 19) மற்றும் தெள்ளாறை அடுத்த வீரனாமூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (23) ஆகிய இருவரும் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதை தொடர்ந்து இருவரையும் கைது செய்து, திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.