பேருந்து நிலைய டிரான்ஸ்பார்மரில் திடீரென தீ: பயணிகள் அலறியடித்து ஓட்டம்
வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் அலறியடித்து ஓடினர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் மூலமாக பஜார் வீதியில் உள்ள முக்கிய கடைகளுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. அதிக திறன் கொண்ட இந்த டிரான்ஸ்பார்மரில் மாலை திடீரென தீ பிடித்தது. அப்போது பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த பயணிகள் டிரான்ஸ்பார்மர் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தில் அலறியடித்து கொண்டு ஓடினர்.
தகவலறிந்த மின்வாரிய துறையினர் உடனடியாக அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். மேலும் செய்யாறு, ஆற்காடு, வேலூர், மேல்மருவத்தூர் செல்லக்கூடிய பேருந்துகளும் ஒன்றன்பின் ஒன்றாக அங்கு கொண்டு செல்லப்பட்டு, அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்து பெரும் விபத்து நடக்க இருந்ததை தடுத்தனர். மேலும் தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுத்து நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயர் மின்அழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்கள் சேதம்
வந்தவாசி அருகே உயர் மின்அழுத்தம் காரணமாக 20 வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தது.
வந்தவாசி அடுத்த கொசப்பட்டு கிராமத்தில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து மின்சாரம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை திடீரென மின் இணைப்பு வந்த போது உயர் மின்அழுத்தம் காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் டி.வி., பிரிட்ஜ், மின்விசிறி, மின்விளக்குகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்து பழுதானது.
மின்மாற்றிகள் சீராக இயங்கவும் மின்சாரம் தடையில்லாமல் வழங்கவும் மின்சாரத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.