வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செய்யாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலங்கள் மூழ்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
ஜவ்வாது மலையில் இருந்து உற்பத்தியாகும் செய்யாறு செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு வழியாக சென்று, காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கம் பகுதியில் பாலாற்றில் கலக்கிறது. தொடர் மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக செய்யாற்றில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் செய்யாற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், படவேடு அருகேயுள்ள செண்பகத்தோப்பு அணையில் இருந்து 6,800 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்படுவதால் செய்யாற்றின் கரையோர வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. .
சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மேம்பாலத்திற்கு சுமார் 7 அடி உயரம் வரை வெள்ளம் ஆர்ப்பரித்து செல்வதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருவதால், வந்தவாசி செல்லும் வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து செல்கின்றன.
பெரணமல்லூர் அருகே ஆவணியாபுரம் பகுதியில் ஆரணி- வந்தவாசி பிரதான சாலையில், நூற்றாண்டை கடந்த அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு மூலம் 147 ஏரிகளுக்கு நீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, வெள்ளம் கரைபுரண்டு செல்வதால், அணைக்கட்டில் உள்ள ஷட்டர்களை திறந்து, தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்
இந்த வெள்ளம் ஆரணி- வந்தவாசி பிரதான சாலையில் வழிந்து செல்வதால், எச்சரிக்கை பேனர் வைத்து, கயிறு கட்டி போக்குவரத்தை துண்டித்தனர்.
கலசபாக்கம்: தொடர் மழை காரணமாக கலசபாக்கம் பகுதிகளில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில், நேற்று பெய்த கனமழை காரணமாக நெல், கரும்பு, மணிலா, மரவள்ளிக்கிழங்கு, மலர் செடிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கலசபாக்கம் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக செய்யாற்று வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்வதால், பழங்கோயில், பில்லூர், மேட்டுப்பாளையம், அணியாலை, காம்பட்டு, பத்தியவாடி, தென்மகாதேவ மங்கலம், சிறுவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது என பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.