திருவண்ணாமலை: தொடக்கப்பள்ளி ஆண்டு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.;
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை, மாவட்டம் வந்தவாசியை அடுத்த சி.ம.புதூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் நம்பெருமாள், தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி, ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் சந்திரசேகர், கீழ்பெண்ணாத்தூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் வேல்முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் ஆசிரியர் பயிற்றுனர் தமிழ்நேசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக செய்யாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நளினி, கலந்து கொண்டு பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சிறு வயது முதலே நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து படிக்க நல்ல புத்தகங்கள் தான் மாணவர்களின் நல் வழிகாட்டி மேலும் செல்போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது, அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தொலைக்காட்சி பார்ப்பது நிறுத்த வேண்டும். ஆகியவற்றை நிறுத்தி மாணவர்களுக்கு நல்வழி காட்ட பெற்றோர்கள் முன் வர வேண்டும். படிப்பு தான் மாணவர்கள் எதிர்காலம் ஆகவே படிப்பில் கவனம் செலுத்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஒரு வழிகாட்டியாக திகழ வேண்டும் என்று பேசினார்.
தீ தடுப்பு செயல்விளக்கம்
வந்தவாசியை அடுத்த தெள்ளாா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தெள்ளாா் தீயணைப்புத் துறையினா் தீ தடுப்பு செயல்விளக்கம் அளித்தனா்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தொண்டு வாரம் ஏப்.14 முதல் 20-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நடைபெற்ற இந்த செயல் விளக்கத்தின் போது, தீ பற்றினால் எப்படி அணைப்பது என்பது குறித்து தெள்ளாா் தீயணைப்பு நிலைய முன்னணி தீ அணைப்பாளா் ரமேஷ் மற்றும் சங்கா், நடராஜன் உள்ளிட்டோா் செய்து காட்டினா். நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் ஹித்தேன்ஷா, அக்மல், சுகாதார ஆய்வாளா் கோதண்டராமன் மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.
தீ தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடா்ச்சியாக, செங்கம் தீயணைப்பு நிலையம் சாா்பில் இரு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் முரளி தலைமை வகித்தாா். செங்கம் காவல் உதவி ஆய்வாளா் யேசுராஜ் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்தப் பேரணியில் பங்கேற்ற செங்கம் தீயணைப்பு நிலைய வீரா்கள், தீ தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.