கஞ்சா விற்ற இருவர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
கஞ்சா விற்ற இருவர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.;
கஞ்சா விற்ற இருவர் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை தாலுகா கீழ்அணைக்கரை கிராமத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவரது மனைவி சுகன்யா (வயது 33). இவர், சாராய வியாபாரத்தில் ஈடுபட்ட போது செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர், தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுவதை தடுக்க குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் சுகன்யாவை போலீசார் குண்டர் திட்டத்தில் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலை ரெயில்வே கேட் அருகே கஞ்சா விற்பதாக திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த கவி பாலாஜி (வயது 23), முத்து விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த விக்கி (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 240 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வாலிபர் கைது
போளூர் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளம்பெண் டிப்ளமோ முடித்துள்ளார். போளூர் அருகே உள்ள அத்திமுர் களியம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30) விவசாயி. இவரும் இளம் பெண்ணும் கடந்த 7 மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இளம் பெண் பிரபாகரன் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்ய கோரி கேட்டுள்ளார். ஆனால் வீட்டில் இருந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் இதுகுறித்து அந்த பெண் போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல்
வந்தவாசியில் சாலை மறியலில் ஈடுபட்ட 71 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த தூக்குவாடி கிராமத்தில் சுடுகாட்டு பாதையை பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த சுடுகாட்டு பாதை அருகில் நிலத்தை வாங்கியவர் சுடுகாட்டுப் பாதை தன்னுடைய இடத்தில் உள்ளது என்று கூறி அதனை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நிலத்தை வாங்கியவர்கள் தரப்பினரிடம் பொதுமக்கள் கேட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் தரப்பில் பேசிய சீனிவாசன் என்பவர் வெட்டப்பட்டார்.
இதை கண்டித்தும், சீனிவாசனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் வந்தவாசி-காஞ்சீபுரம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூக்குவாடி கிராமத்தை சேர்ந்த மண்ணு (வயது 50), ஜெயபால், நந்தகோபால், தாமோதரன் உள்பட 71 பேர் மீது வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.