இளம்பெண் மர்ம சாவு உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
வந்தவாசி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது சகோதரி போலீசில் புகார் செய்துள்ளார்.;
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து அவரது சகோதரி போலீசில் புகார் செய்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொவளை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அம்மு (வயது 32.) இவர்களுக்கு அனுஷ்குமார், கோகுல் என 2 மகன்கள் உள்ளனர். செந்தில் சரிவர வேலைக்கு செல்வதில்லை என தெரிகிறது.
மேலும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கிராமத்தில் திருவிழா நடந்தது. இதையொட்டி நடந்த தெருக்கூத்து நாடகத்தை கணவன், மனைவி இருவரும் பார்த்துவிட்டு அதிகாலையில் வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளனர். தொடர்ந்து, நேற்று காலை 9 மணியளவில் செந்தில், மாட்டுக்கு தண்ணீர் காட்ட மனைவி அம்முவை எழுப்பி உள்ளார்.
அப்போது, அம்மு தனக்கு அசதியாக உள்ளதாகவும், நீங்களே சென்று மாட்டிற்கு தண்ணீர் காட்டி விடுங்கள் என கூறினாராம். எனவே, செந்தில் மாட்டிற்கு தண்ணீர் காட்டி விட்டு, பிறகு விவசாய வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர், மதியம் வீட்டிற்கு வந்தபோது அம்மு படுக்கையில் இருந்ததால் சந்தேகம் அடைந்த செந்தில் எழுப்பி பார்த்துள்ளார். ஆனால், அம்மு கண் விழிக்கவில்லை. இதனால், செந்தில் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அம்முவை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அம்மு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அம்முவின் சகோதரி லட்சுமி என்பவர் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்கு பதிவு செய்து, அம்மு மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
எஸ்.ஐ. மனைவி தற்கொலை
திருவண்ணாமலை-போளூர் சாலை செட்டிகுள மேட்டு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் . கலசபாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி . இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2 மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. ஒரு மகள் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
உமா மகேஸ்வரி சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.