சாராய ஊறல் அழிப்பு உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு வயலில் போடப்பட்ட சாராய ஊறல் அழிக்கப்பட்டது உள்ளிட்ட க்ரைம் செய்திகள் பதிவிடப்பட்டுள்ளது.;
சாராய ஊறலை கொட்டி அழித்த போலீசார்
திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கிராமிய டி. எஸ். பி. முருகன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நதியா மற்றும் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் ஆகியோர் கொண்ட குழுவினர் மூஞ்சிராம்பட்டு பகுதியில் சோதனை செய்தனர்.
அப்போது அங்குள்ள கரும்பு வயலில் சாராயம் ஊறல் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கரும்பு வயலில் 10-க்கும் மேற்பட்ட பேரல்களில் சாராயம் ஊறல் போடப்பட்டு இருப்பதும், சாராயம் பாக்கெட் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் வடித்தட்டு, பானைகள் உள்ளிட்டவர்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
இதனையடுத்து பேரல்களில் உள்ள சாராய ஊறலை அதே இடத்தில் கொட்டி அழித்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தானிப்பாடி
தானிப்பாடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தட்டரணை காட்டுப்பகுதி, தச்சம்பட்டு மற்றும் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தும்பக்காடு தன்னீர்பாரை ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்து 350 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் சுமார் 170 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் தலைமறைவாகி உள்ள சாராய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஏரிக்கரையில் வேன் கவிழ்ந்தது
வந்தவாசி அருகே ஏரிக்கரையில் வேன் கவிழ்ந்தது.
திருச்சியில் இருந்து வாழைத்தார்களை ஏற்றிக்கொண்டு சதீஷ் என்பவர் வேனை ஓட்டிக்கொண்டு வந்தவாசி வழியாக காஞ்சீபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வந்தவாசியை அடுத்த தெய்யார் கிராமம் அருகே வரும்போது வேன் எதிர்பாராத விதமாக ஏரிக்கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் சதீஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதையடுத்து கிரேன் மூலம் வேன் மீட்கப்பட்டது.