அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக வந்தவாசி அருகே உள்ள கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-03-18 10:24 GMT

வந்தவாசி அருகே தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனர் வைத்த கிராம மக்கள்.

வந்தவாசி அருகே சக்தி நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தராததால் மக்களவை தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ் சாத்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி சக்தி நகர் ஆகும். இந்த சக்தி நகர் பகுதியில் 200 குடும்பத்துக்கும் மேற்பட்டோர் 10-க்கும் மேற்பட்ட தெருக்களில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் வசிக்கும் பகுதியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வசதி முறைப்படுத்தப்படாமலும் தற்போது உள்ள மண் சாலையும் குண்டு குழியுமாக உள்ளதால் இப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். கழிவுநீா்க் கால்வாய் வசதி இதுவரை செய்து தரப்படவில்லை.

இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் அதிகாரிகளிடமும் மனு அளிக்கப்பட்டதாக இப்பகுதி மக்கள் கூறினர். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எந்த அதிகாரிகளும் எடுக்கப்படாததால் திடீரென ஊர் பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் இளைஞர்கள் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் ஓட்டு கேட்டு எந்த கட்சியினரும் எங்கள் பகுதிக்கு வராதீர்கள் என சாலையின் முன் ஒரு பெரிய பேனரை வைத்து நூதன முறையில் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

கிராம மக்கள் வைத்துள்ள பேனர் குறித்து தகவல் அறிந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தம் சக்தி நகர் மக்களை சமாதானப்படுத்தி 150 மீட்டர் சாலை அமைக்கும் பணிக்கான ஆணை வந்துள்ளது .அதனை உடனடியாக செயல்படுத்தப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அந்த பேனரை அப்பகுதி பொதுமக்கள் அகற்றினர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News