பள்ளி செல்லா இடை நின்ற மாணவா்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சோ்க்கை
பெரணமல்லூா் ஒன்றியத்தில் பள்ளி செல்லா இடை நின்ற மாணவா்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சோ்க்கை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற நரிக்குறவர் இன மாணவர்கள் 14 பேர் வட்டாரக் கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் பழங்குடி நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட நரிக் குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளை நாள்தோறும் கூலி வேலைக்கு அழைத்து ச்சென்று விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் பள்ளியில் சேராமலும், இடைநின்றும் இருந்து வந்தனர். இதனை கண்டறிந்த பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ராமலிங்கம், அப்பாஸ் மற்றும் நெடுங்குணம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாஸ் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதிக்கு சென்று குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்வி கற்பதால் ஏற்படு ம் நன்மைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துக் கூறியதை தொடர்ந்து பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நெடுங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் தலைமையில் நரிக்குறவர் இன குழந்தைகள் 14 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
இதில் புதிதாக முதலாம் வகுப்பில் 4 பேர், 2, 3, 5ம் வகுப்புகளில் தலா ஒருவர், 4ம் வகுப்பில் 3பேர், 6 மற்றும் 7ம்வகுப்பில் தலா 2பேர் என 14 மாணவர்கள் ஒரே நாளில் பள்ளி சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு அரசு வழங்கிய இலவச பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகள் உடனடியாக வழங்கி நாள்தோறும் தவறாமல் பள்ளிக்கு வருகை தந்து ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை நன்கு படித்து முன்னேற வேண்டும் என மாணவர்களை வாழ்த்தினர். மேலும் மாணவர்களை நாள்தோறும் பள்ளிக்கு அழைத்து சென்றுவர ஆட்டோவசதியும் செய்யப்பட்டுள்ளதாக வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாஸ், ஆசிரியைகள் சரஸ்வதி, அலமேலு, தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் , வட்டார கல்வி அலுவலர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.