பங்குனி உத்திர திருவிழா: பல்வேறு கோவில்களில் தேரோட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது

Update: 2023-04-04 01:46 GMT

ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தில் உள்ள அமிர்தாம்பிகை சமேத சுயம்பு சந்திரசேகர சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த 26-ம்  தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

தினசரி காலை மாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் காலையிலும் மாலையிலும் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. உற்சவர் அமிர்தாம்பிகை சமேத சந்திரசேகரசுவாமியை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரிய மரத்தேரில் வைக்கப்பட்டது.

அதேபோல தேருக்கு முன்பும், பின்பும் புலி வாகனத்தில் அய்யப்பன், மயில்வாகனத்தில் முருக பெருமான், மூஷிக வாகனத்தில் விநாயகர், நால்வர் உள்பட ஐந்து சப்பரங்களில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சிவபுராணம் பாடியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் மீது உப்பு, மிளகு, பொரி உருண்டை, சாக்லேட் போன்றவற்றை நேர்த்திக்கடனாக இறைத்தனர். மேலும் தேர் சொல்லும் பகுதியில் நீர் மோர், குளிர்பானம் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் குப்புசங்கர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சங்கர், விழா குழுவினர், கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.

வந்தவாசி

ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம் வந்தவாசியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசி மாதமும், ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்டம் பங்குனி மாதமும் நடைபெறும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் 2 கோவில்களின் மரத்தேர்களும் சேதமடைந்ததால் தேரோட்டம் நடைபெறவில்லை.

இதையடுத்து தமிழக அரசு ஒதுக்கிய சுமார் ரூ.60 லட்சம் நிதியுடன், பொதுமக்கள் பங்களிப்பையும் சேர்த்து 2 புதிய தேர்களை செய்யும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.

இந்த நிலையில் ரங்கநாத பெருமாள் கோவிலுக்கான புதிய தேர் செய்யும் பணி நிறைவடைந்ததையடுத்து, தேரின் வெள்ளோட்டம் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 28-ம் தேதி தொடங்கியது.

விழாவின் 7-ம் நாளான நேற்று 15 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த புதிய மரத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரில் ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் பவனி வந்தார்.

கோவில் அருகிலிருந்து புறப்பட்ட தேர் காந்தி சாலை, பஜார் வீதி, கே.ஆர்.கே. தெரு, சன்னதி தெரு ஆகிய மாட வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலைஅடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News