கல்வியில் முதலிடம் கொண்டு வர ஆசிரியர்கள் உழைக்க வேண்டும்; அமைச்சர் அறிவுறுத்தல்
கல்வியில் திருவண்ணாமலை மாவட்டத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கு, ஆசிரியர்கள் உழைக்க வேண்டும் என அமைச்சர் கூறினார்.
வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள், இலவச சீருடைகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறைசார்பில், திருவண்ணாமலை மாவட்ட மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுமாணவ மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள், இலவச சீருடைகளை வழங்கி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பேசியதாவது,
தமிழ்நாடு கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாகவேண்டும். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு முதல் அமைச்சர் 24 மணிநேரமும் உழைத்து வருகிறார். இதனால் தான் மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் வறுமை ஒழிப்பு , பட்டினி ஒழிப்பு தாராளமான கல்வி உள்ளிட்ட 13 இலக்குகளில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலையில் உள்ளது.
ஊரக பகுதி மாணவர்கள் கல்வி மேம்பட வேண்டும் என்பதற்காக விலையில்லா சைக்கிள்கள், இலவச சீருடைகள் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் விருதுநகர் போன்ற மாவட்டங்கள் கல்வியில் முன்னணியில் உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் பின்தங்கி உள்ளது. நமது மாவட்டத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக, ஆசிரியர்கள் ஊக்கத்துடன் உழைக்க வேண்டும். முதல் இ ட மாணவர்களின்பால் கவனம் செலுத்துவதை காட்டிலும் 3 ம் இடத்திலுள்ள மாணவனை அக்கறை செலுத்தி முன்னேற்றுவது முக்கியம். அவர்களை கண்டறிந்து பள்ளி விட்டபின் தனிவகுப்புகள் நடத்துவது நலம் பயக்கும்.
நான் கல்வித்துறையில் அதிகாரியாக இல்லாதிருக்கலாம். ஆனால் கல்விப்பணியில் 40 ஆண்டு அனுபவம் எனக்குண்டு. ஏழைத் தாய் தந்தையரின் பொருளாதார சிக்கல்களை கருத்தில்கொண்டே அரசு விலையில்லா சைக்கிள்கள், சீருடைகளை வழங்கி வருகிறது.
ஆள் பாதி, ஆடைபாதி என்பார்கள். முன்னெப்போதும் இல்லாத வகையில் மகளிர் தையல் கூட்டுறவு சங்கம் மூலமாக அளவெடுத்து தைக்கப்படும் சீருடைகளே வழங்கப்படுகின்றன. மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதல் அமைச்சர் உழைப்பதால்தான் வறுமை ஒழிப்பில் முதல் மாநிலமாக திகழ்கிறது. அரசு பள்ளி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம்போல அரசு பள்ளிகளி ல் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்முதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் பேசினார்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியில், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தொடக்க உரையாற்றினார்கள்.
தொடர்ந்து, 1 இலட்சத்து 47 ஆயிரத்து 513 மாணவர்களுக்கு சீருடையும், 21 ஆயிரத்து 633 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்குவதையும் தொடக்கி வைத்து , வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மருதாடு அரசினர் மேல்நிலைப்பள்ளி, இரும்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி, கீழ்கொவளைவேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி, சன்னதி மேல்நிலைப்பள்ளி ஆர் சி எம் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 1252 மாணவ, மாணவி யருக்கு விலையில்லா சைக்கிள்களையும் சீருடைகளையும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
நிகழ்வில், மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசம்பந்தன், வந்தவாசி திமுக நகர செயலாளர் தயாளன், வந்தவாசி நகரமன்ற தலைவர் .ஜலால், நகரமன்ற உறுப்பினர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் , தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர் கலந்து கொண்டனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்துணைத்தலைவர் அப்துல் ரசூல் நன்றி கூறினார்.