வகுப்பறைக் கட்டடம் கட்டித் தரக்கோரி மாணவா்கள் போராட்டம்
வந்தவாசி அருகே பள்ளிக்கு போதிய வகுப்பறைக் கட்டடம் கட்டித் தரக் கோரி, மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் தா்ணாவில் ஈடுபட்டனா்.
வந்தவாசி அருகே இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டித்தரக்கோரி மாணவர்கள் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாறு ஒன்றியத்தைச் சேர்ந்த கீழ் வெள்ளியூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி இயங்கிவருகிறது. பிச்சாண்டி என்பவர் தலைமை ஆசிரியராக உள்ள இந்த பள்ளியில் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் 70 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளிக்கட்டிடம் பழுதடைந்த நிலையில் 2019-ல் கட்டிடம் இடிக்கப்பட்டது. புதுக்கட்டிடம் வேண்டி கீழ்வெள்ளியூர் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகம், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆகியவற்றில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த பள்ளியில் போதுமான கட்டிடம் இல்லாததால் பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். சில நாட்கள் பள்ளியின் எதிர்புறமுள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டிடத்திலும், நூலகத்திலும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் சாலையை கடக்கும் பொழுது விபத்து நேருமோ என்ற அச்சமும் மற்றும் பள்ளியின் சுற்றுப்புற சுவர் அருகே அடர்த்தியான முள் வளர்ந்திருப்பதால் விஷ பூச்சிகள் ஏதும் கடிக்குமோ என்ற அச்சமும் பொதுமக்களுக்கு நிலவி வருகிறது.
குழந்தைகளுக்கு பாதுகாப்பான மன நிறைவான கல்வி கிடைக்க பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்பதற்காக 2021 ல் இருந்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கோரிக்கை கிடப்பில் கிடப்பதால் இன்று மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பவில்லை. முனைப்பு காட்ட வேண்டிய வட்டார கல்வி அலுவலகம் பாராமுகமாக இருப்பதாகவும், தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலகம் கண்டுகொள்ளவில்லை எனக்கூறிய பொதுமக்கள், பெற்றோர்கள் தெள்ளாறு மேற்கு ஒன்றிய செயலாளர் தசரதன் தலைமையில் ஒன்று திரண்டு தங்கள் பிள்ளைகளுடன் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக பந்தல் அமைத்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தினர் . தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம், டிஎஸ்பி கங்காதரன் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாதத்தில் புதிய கட்டிடத்திற்கான பணிகள் துவங்கும் என உறுதியளித்ததை யடுத்து மாணவர்களின் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
வடவணக்கம்பாடி காவல் உதவி-ஆய்வாளர் தட்சணாமூர்த்தி தலைமை யிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆரம்ப நிலையில் கல்வி பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் போராட்டம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.