வெளியூர் காரர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதை நிறுத்த வேண்டும்: கிராம மக்கள் போராட்டம்
வெளியூரை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதை கண்டித்து கிராம மக்கள் வந்தவாசி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளியூரை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதை கண்டித்து சேதாரகுப்பம் கிராம மக்கள் வந்தவாசி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி தாலுகாவுக்குட்பட்ட சேதராகுப்பம் கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் வெளியூர் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்தனராம். இதனையறிந்த சேதராகுப்பம் கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் வெளியூர் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வருவாய்த்துறையினரை கண்டித்து ஊராட்சி மன்றத் தலைவர் பவுனுகிருஷ்ணன், துணைத் தலைவர் துளசி வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் வந்தவாசி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
எங்கள் கிராமத்தில் 3.42 ஏக்கர் அரசு தோப்பு புறம்போக்கு நிலம் உள்ளது. இதனைத் தவிர வேறு அரசு புறம்போக்கு நிலம் எதுவும் எங்கள் கிராமத்தில் இல்லை. அந்த இடத்தில் இந்த கிராமத்தை சேர்ந்த குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டுத் திடல் கட்டித் தருமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை அளித்துள்ளோம்.
ஆனால் அந்த இடத்தில் வெளியூர் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நடவடிக்கைகளில் வருவாய்த்துறையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இதனால் வருங்காலத்தில் எங்கள் கிராமத்தில் அரசு கட்டடங்கள் , அரசு பள்ளிகள் , அரசு மருத்துவமனை உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள போதுமான இடவசதி இல்லாமல் போய்விடும். எனவே அந்த இடத்தில் வெளியூர் மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்குவதை கண்டித்து நாங்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனைத் தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் தாசில்தார் ராஜேந்திரனிடம் மனு அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததை அடுத்து சேதராகுப்பம் கிராம மக்கள் புறப்பட்டுச் சென்றனர்.