எரிவாயு தகன மேடை கட்டடப் பணிக்கு முறை கேடாக பயன்படுத்திய மின்மோட்டார் பறிமுதல்

எரிவாயு தகன மேடை கட்டிட பணிக்கு முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியதால், அதிகாரிகள் மின்மோட்டரை பறிமுதல் செய்தனர்.

Update: 2022-07-02 07:43 GMT

மின்மோட்டார், மின்வயர், குழாய் ஆகியவற்றை   பறிமுதல் செய்த அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையத்தை அடுத்துள்ள நகராட்சி பூங்காவை ஒட்டியுள்ள சுடுகாட்டு வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிய எரிவாயு தகன மேடை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தனியார் ஒப்பந்ததாரர் இந்த பணியை செய்து வருகிறார்.

இந்த பணிக்கு தேவையான தண்ணீரை பூங்கா நடுவில் உள்ள குளத்தில் இருந்து மின்மோட்டார் மூலம் எடுத்து பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது . மின் மோட்டாரை இயக்குவதற்கான மின்சாரத்தை தற்காலிக மின்இணைப்பு பெற்று பயன்படுத்தாமல் புதிய பஸ் நிலைய மின் இணைப்பில் இருந்து முறைகேடாக எடுத்து பயன்படுத்தி உள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த கோட்ட உதவி செயற்பொறியாளர் சசிகுமார், உதவி பொறியாளர் பஞ்சமூர்த்தி உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் எரிவாயு தகன மேடை கட்டிட பணிக்கு முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து மின்மோட்டார், மின்வயர், குழாய் ஆகியவற்றை மின்வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News