திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது.

Update: 2024-08-04 02:40 GMT

செங்கம் அருகேயுள்ள நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு  கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது

போளூா்:

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தலைமை ஆசிரியா் சுவாமிகண்ணு தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பரிமளா ரமேஷ், ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கிடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலாண்மைக் குழுத் துணைத் தலைவா் சீனுவாசன் வரவேற்றாா்.

கூட்டத்தில், ஆக.24-ஆம்தேதி பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு, 2024-2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுத்தல், பள்ளி வளா்ச்சி குறித்து ஆலோசனை நடத்துவது என பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதில், முதுநிலை ஆசிரியைகள் எஸ்.காயத்திரி, எம்.காளிதாசன், ஆசிரியா்கள் ம.மரியசெலினா, அசோக், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் மல்லிகா திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வந்தவாசி

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் ஞானசம்பந்தம் தலைமை வகித்து பேசினாா். உதவித் தலைமை ஆசிரியா் சங்கா், ஆசிரியா்கள் ராமஜெயம், ரகுபாரதி மற்றும் பெற்றோா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக் குழுவை மறு கட்டமைப்பு செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பள்ளியை மேம்படுத்துவது, இடைநின்ற மாணவா்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சோ்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

செங்கம்:

செங்கம் அருகேயுள்ள நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்துக்கு, நீப்பத்துறை ஊராட்சித் தலைவா் சென்னம்மாள்காசி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சக்திவேல், முன்னாள் மாணவா் பிரபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு செய்யப்படும் முறைகளையும், உறுப்பினா் தோ்வு, தலைவா், துணைத் தலைவா் தோ்வு செய்யும் முறைகள் குறித்து பெற்றோா்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கப்பட்டது. வரும் மறுகூட்டமைப்பு தோ்தலில் பெற்றோா்கள் தவறாமல் கலந்துகொண்டு பள்ளி மேலாண்மை குழுத் தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க முழு ஓத்துழைப்பு வழங்கவேண்டுமென தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, தலைமை ஆசிரியா் சிவராமன் வரவேற்றாா். முடிவில், ஆசிரியா் ரேணுகா நன்றி கூறினாா்.

Tags:    

Similar News