நாடக மேடை அமைக்க பள்ளி மாணவிகள் எதிர்ப்பு

பள்ளியின் நுழைவு வாயில் அருகே நாடக மேடை கட்ட எதிா்ப்பு தெரிவித்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-12-23 01:57 GMT

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்

வந்தவாசியை அடுத்த தேசூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா்.

பள்ளியின் முன்பு உள்ள ரேணுகாம்பாள் கோவில் காலி இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் மூலமாக 10 லட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.

அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள், அப்பகுதிக்கு வந்து பள்ளி அருகே நாடக மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர் பள்ளியின் நுழைவாயில் முன்பாக நாடக மேடை அமைத்தால் மாணவிகள் எவ்வாறு பள்ளிக்கு சென்று வருவார்கள் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் சக்தி குமாரி, முன்னாள் தலைவர் ரவி உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் கிராம நிர்வாக அலுவலர் முருகன் உடனே வந்து பணியை நிறுத்தும்படி கட்டட தொழிலாளர்களிடம் கூறினார்.

மேலும் பேரூராட்சி தலைவர் ராதா ஜெகதீரா பாண்டியன், இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டனர் . பின்னர் பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் தேசூர் அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவாயிலை அடைத்து கட்டப்படும் நாடக மேடையை தடை செய்யக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் ,தாசில்தார் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று பள்ளி மாணவிகள் பள்ளி நுழைவாயில் உட்பகுதியில் அமர்ந்தவாறு நாடக மேடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர் .

பள்ளி நுழைவு வாயில் அருகே நாடக மேடை கட்டுவதால் பள்ளி சென்று வருவதில் சிரமம் ஏற்படும் என தெரிவித்தனர்.

தகவலறிந்த தேசூா் போலீஸாா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் மாணவிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனா்.

Tags:    

Similar News