சிமெண்ட் கால்வாய் அமைக்கும் பணி முறையாக நடைபெறவில்லை என சாலை மறியல்

Road Block Today -முழுமையாக செய்தால் பணியை செய்யுங்கள், அரைகுறையாக செய்த இந்த பணி தேவையில்லை எனபொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.;

Update: 2022-10-12 01:52 GMT

பள்ளிக்கு உடனடியாக புதிய கட்டடம் கட்டி தரக்கோரி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Road Block Today -திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆரணி அருகே சிமெண்ட் பக்க கால்வாய் அமைக்கும் பணி முழுமையாக நடைபெறவில்லை என்றும்,  பள்ளிக்கு கட்டிடம் கட்டித் தரக் கோரியும் சாலை மறியல் நடைபெற்றது

ஆரணி அருகே சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட சக்தி நகர் 1-வது தெருவில் சுமார் 120 மீட்டர் நீளமுள்ள தெருவுக்கு 50 மீட்டர் தொலைவிற்கு மட்டும் 15-வது நிதி குழு மானியத்தில் ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் சிமெண்டு பக்க கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முழுமையாக செய்யாத இந்த பணி தேவையில்லை. முழுமையாக செய்தால் பணியை செய்யுங்கள். இல்லை என்றால் வேலை வேண்டாம் என பணியை தடுத்து நிறுத்தி அப்பகுதி பொதுமக்கள் ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா காவல் ஆய்வாளர் பி.புகழ், காவல் உதவி ஆய்வாளர் ஷாபுதீன் மற்றும் காவல்துறையினர், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) இல.சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்தனர்.

தற்போது 50 மீட்டர் பணி செய்ய ரூ.2.16 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதிப்பணிக்கு முன்னுரிமை அளித்து விரைவில் முதல் பணியாக எடுத்து இப்பகுதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

வந்தவாசி அருகே பள்ளிக்கு உடனடியாக புதிய கட்டடம் கட்டி தரக்கோரி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தெள்ளாறு ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்தியவாடி ஊராட்சி காலனி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியின் கட்டடம் மிகவும் சேதம் அடைந்ததால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஒன்றிய நிர்வாகத்தால் கட்டடம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது இதனால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிக்கு உடனடியாக புதிய கட்டடம் கட்டித் தரக் கூறி அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் சத்தியவாடி கூற்று ரோடில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது பெற்றோர்கள் கூறியதாவது,

பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டதால் எங்கள் பிள்ளைகள் மரத்தடியில் கல்வி பயில்கின்றனர். மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் எங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும். மழை அதிகமாகும் பட்சத்தில் பள்ளிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் எங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. புதிய கட்டிடம் கட்டுவது குறித்து கேட்டால் அதிகாரிகள் சரிவர பதில் அளிப்பதில்லை எனவே பள்ளிக்கு புதிய கட்டிடம் உடனடியாக கட்டி தரக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தெள்ளாறு காவல்துறையினர்  பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் விரைவில் அதிகாரிகளிடம் பேசி உங்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்களை சமாதானப்படுத்தினர்

இதை அடுத்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் . இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 2. மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News