வந்தவாசி அருகேபாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வந்தவாசி அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளியின் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;
தொழிலாளியின் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆராசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை, கட்டிட தொழிலாளி. இவர் வந்தவாசி பகுதியில் உள்ள ஆராசூர்- தென்சேந்தமங்கலம் கிராமம் செல்லும் சாலையில் உள்ள சிறு பாலத்தில் நேற்று இரவு தனது நண்பர்கள் விநாயகம், மூர்த்தி ஆகியோருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏழுமலை பாலத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்து மயங்கி உள்ளார்.
உடனே இது குறித்து அவரது நண்பர்கள் விநாயகம் மற்றும் மூர்த்தி ஆகியோர் கிராமத்திற்கு வந்து ஏழுமலையின் மனைவி ராஜலட்சுமி மற்றும் மகன் குமரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் உறவினர்களுடன் சென்று ஏழுமலையை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் ஏழுமலை ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் காலை ஏழுமலையின் சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் மருத்துவமனை எதிரில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வந்தவாசி துணை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்குமேல் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர் ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதைனக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மறியல் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.