வந்தவாசியில் குழந்தையின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்
வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 மாத குழந்தை உயிரிழந்ததையடுத்து, மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, குழந்தையின் சடலத்துடன் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.;
வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 மாத குழந்தை உயிரிழந்ததையடுத்து, மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, குழந்தையின் சடலத்துடன் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வந்தவாசி கோட்டைக்குள் முஸ்லிம் தெருவில் வசித்து வருபவர், இப்ராஹிம். பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார். ஜபீனா என்ற மனைவியும் அப்துல் ரசூல் என்ற 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.
இவர்களது 6 மாத ஆண் குழந்தை முகமதுரசூல் 3 நாட்களுக்கு முன்பு சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முகமதுரசூலுக்கு டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தாய்ப்பால் கூட குழந்தை குடிக்காததால் டாக்டரிடமும் செவிலியரிடமும் ஜபீனா கேட்டுள்ளார். ஆனால் மெதுவாகத்தான் குணமாகும் என அலட்சியமாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை முகமதுரசூல் உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், உயிரிழப்புக்கு இரவுப் பணியிலிருந்த மருத்துவா், செவிலியா் உரிய சிகிச்சை அளிக்காததே காரணம் என புகாா் தெரிவித்தும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மருத்துவமனை வளாகத்தில் அமா்ந்து தா்ணாவில் ஈடுபட்டனர்.
இதைத் தொடா்ந்து மருத்துவமனை முன் குழந்தையின் சடலத்துடன் அவா்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.
அப்போது, உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவா், செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், குழந்தையின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தில் அவர்கள் புகார் அளித்தனர். ஆனால் எந்த விசாரணையும் அது குறித்து மேற்கொள்ளப்படவில்லை.
தகவலறிந்து அங்கு சென்ற செய்யாறு சாா் -ஆட்சியா் அனாமிகா, மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் பாபுஜி, துணை இயக்குநா் ஏழுமலை, ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு குழந்தையின் சடலத்தை எடுத்துச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து, குழந்தை முகமதுரசூலின் உறவினா்கள், இரவுப் பணியிலிருந்த மருத்துவா், செவிலியா் உள்ளிட்டோரிடம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் பாபுஜி விசாரணை மேற்கொண்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
குழந்தை முகமதுரசூலின் உயிரிழப்புக்கு மருத்துவா், செவிலியா் ஆகியோரின் சேவைக் குறைபாடு காரணம் என விசாரணையில் தெரிய வந்தால் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
மறியல் போராட்டத்தால் வந்தவாசி- மேல்மருவத்தூா் சாலையில் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.