வந்தவாசி அருகே தனி வருவாய் கிராமம் கோரி பொது மக்கள் சாலை மறியல்
வந்தவாசி அருகே கொண்டையங்குப்பம் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கொண்டையங்குப்பம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கொண்டையங்குப்பம் கிராமம் நல்லூர் கிராமத்தோடு இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்த கிராம மக்கள் வருவாய் துறை தொடர்பான சான்றிதழ் பெற நல்லூர் கிராமத்திற்கு தான் செல்ல வேண்டும்.இதனால் சிரமத்துக்கு ஆளாகி வந்த கொண்டையங்குப்பம் கிராம மக்கள் தங்களது கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க கோரி பல ஆண்டுகளாக மனு அளித்தும் போராட்டங்களை நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தங்களது கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்தவாசி- திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தங்களது கிராமத்தை தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும், நல்லூர் ஏரியில் தங்களுக்கும் மீன் மகசூல் உரிமை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கிராம மக்கள் கூறுகையில், கொண்டையங்குப்பம் கிராமத்தை நல்லூர் கிராமத்தில் இருந்து பிரித்து தனி வருவாய் கிராமமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
பலமுறை மாவட்ட ஆட்சியருக்கும், வந்தவாசி தாசில்தாருக்கும் புகார் மனு அளித்தும் மேலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் தான் நாங்கள் சாலை மறியலில் ஈடுபடுகிறோம் எனக் கூறினர்.
அப்போது சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த வழியாக வந்த வாகனங்களை வேறு பாதைக்கு மாற்றிய போது சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் அப்பகுதிக்கு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சு.காட்டேரி என்ற கிராமம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர்
இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் சம்பவ இடத்துக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து தகவல் அறிந்த செய்யாறு தாசில்தார் வினோத்குமார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பிறகு கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.