மயானத்துக்கு பாதை வசதி கோரி நூதன முறையில் மக்கள் போராட்டம்
மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால் விவசாயிகள் பாடை கட்டி ஊர்வலமாக வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.
வந்தவாசியை அடுத்த கூத்தம்பட்டு, கீழ்வெள்ளியூர், கீழ்நமண்டி, ஆச்சமங்கலம் கிராமங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மயானங்களுக்கு உரிய பாதை வசதி இல்லாததால் இறந்தவர்கள் உடல்களை அங்கு கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து விவசாயிகள், அப்பகுதி பொதுமக்கள் சுமார் இரண்டு ஆண்டு காலமாக பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை வருவாய் துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து பலமுறை விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரையிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கூத்தம்பட்டு, கீழ்வெள்ளியூர், அச்சமங்கலம், கீழ்நமண்டி நான்கு கிராமங்களைச் சேர்ந்த பட்டியலின மக்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி அவர்கள் பாடை ஒன்றை கட்டி தயார் செய்தனர். பாடைக்கு மாலை அணிவித்த அவர்கள் சென்னாவரம் கூட்டுச் சாலையிலிருந்து பாடையை தூக்கிக் கொண்டு வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் பெண்களும் கலந்து கொண்டனர். ஊர்வலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது. அப்போது அவர்களை குறைதீர் கூட்டத்துக்கு செல்ல விடாமல் வந்தவாசி தெற்கு காவல்துறை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அவர்கள் மயானத்துக்கு பாதை வசதி செய்து தரக்கோரி கோஷமிட்டவாறு நின்றனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அங்கு செய்யாறு ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனரும், குறைதீர் கூட்ட அலுவலருமான யுவராஜ், வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி, வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன்பாபு ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாடையை கீழே இறக்கி வைத்த விவசாயிகள் மயானங்களுக்கு பாதை வசதி செயது தர பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என ஆதங்கப்பட்டனர். அவர்களிடம் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
அதிகாரிகள் சுடுகாட்டு பாதை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.