வந்தவாசி அருகே சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
Public Protest - புதிய தார் சாலை அமைக்க கோரி கோயில்குப்பம் கிராமத்தில் பெண்கள் சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Public Protest -திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி- விளாங்காடு சாலையில் உள்ள ஆரியாத்தூரில் இருந்து சாத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோயில்குப்பம் கிராமத்துக்குச் செல்லும் சுமார் ஒன்றரை கி.மீ. தூர தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. புதிய சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியும் பலனில்லை.
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையில் உள்ள சேற்றில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்த தார் சாலை போடப்பட்டது. போட்ட சில மாதங்களிலேயே இந்த சாலை சேதமடைய தொடங்கியது. காலப்போக்கில் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கே பயனற்ற நிலையில் சேதமடைந்து விட்டது.
பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் மக்கள் சேற்றில் விழுந்து காயமடைகின்றனர். இதுகுறித்து ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே புதிய சாலை அமைக்கக் கோரி சாலையில் நாற்று நடும் போராட்டம் செய்கிறோம் என்றனர். அடுத்து திருவண்ணாமலைக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க உள்ளோம் என தெரிவித்தனர். பின்னர், அவர்களாகவே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2