வந்தவாசியில் சாலையில் தனியார் பேருந்துகளின் பந்தயம்: பயணிகள் அச்சம்
வந்தவாசி அருகே இரு தனியார் பேருந்துகள் அசுர வேகத்துடன் ஒன்றையொன்று முந்தி செல்லும் போட்டியில் பயணிகள் அச்சமடைந்தனர்.;
உரசியபடி வந்த பேருந்துகள்.
வந்தவாசி அருகே இரு தனியார் பேருந்துகள் அசுர வேகத்துடன் ஒன்றையொன்று முந்தி செல்லும் போட்டியில் பயணிகள் அச்சமடைந்தனர்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்து ஆரணிக்கு நேற்று புறப்பட்ட தனியார் பேருந்தும், திண்டிவனத்தில் இருந்து தெள்ளார் வழியாக ஆரணிக்கு மற்றொரு தனியார் பேருந்தும் சென்றது.
வந்தவாசி அடுத்த சடத்தாங்கல் கூட்டுச்சாலை அருகே இரண்டு தனியார் பேருந்துகளும் ஒன்றன் பின் ஒன்றாக செல்ல தொடங்கின.
அப்போது 2 பேருந்துகளும் நேர வித்தியாசம் காரணமாக ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயன்றன. அப்போது பேருந்துகள் ஒன்றோடு ஒன்று உரசுவது போன்று இருந்தது.
மேலும் அப்போது வழி தடத்தில் உள்ள பயணிகளை ஏற்றுவதற்காக இரு பேருந்துகளும் ஒன்றையொன்று முந்தி செல்ல போட்டி போட்டுக்கொண்டு அசுர வேகத்தில் சென்றன. சிறிது தூரத்துக்கு சாலை முழுவதையும் அடைத்து கொண்டு அருகருகே சென்றுள்ளன.
இதனால் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள் அச்சம் அடைந்து பீதியில் உறைந்தனர். இரு பேருந்து ஊழியர்களும் பயணிகளை பற்றி கவலைப்படாமல் பேருந்து ஓட்டியவாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்
பின்னர் சாலையின் நடுவே டிரைவர்கள் பேருந்துகளை நிறுத்தி திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இரண்டு பேருந்துகளுக்கு இடையே முந்தி செல்லும் போட்டியால், எதிர் திசையில் வந்த வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி சாலையோரம் ஒதுங்கிக் கொண்டனர்.
இதனை அங்கிருந்த சில பயணிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். செல்போன்களில் பதிவான வீடியோக்களை சமூக வலைதளங்களில் தற்போது வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்தி 2 பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, 2 பேருந்துகளையும் பறிமுதல் செய்து, பயன்பாட்டை முடக்க ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.