சேத்துப்பட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை
சேத்துப்பட்டு நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள செஞ்சி, வந்தவாசி, ஆரணி , போளூர் ஆகிய நான்கு சாலைகளில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள், அதிகாரிகள் போக்குவரத்து சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர்.
சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு ஆய்வுக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, நான்குமுனை சந்திப்பில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கண்டு சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் பஜார் வீதிகளில் உள்ள சாலையோர கடைகளை அப்புறப்படுத்தவும், வாகனங்களை சாலையில் நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கவும், பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கவும், ஆட்டோக்கள் சாலையில் நிறுத்தாமல் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்படி சேத்துப்பட்டு போலீசார் போக்குவரத்தை உடனடியாக ஒழுங்கு செய்ய நான்கு சாலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கடைகளின் முன்பு கயிறு கட்டி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாகனங்களை சாலையில் விடாமல், அதையும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது