வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்

வந்தவாசியில் வக்கீலை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து காவல் துணை ஆய்வாளர் உட்பட நான்கு பேர் பணியிட மாற்றம்;

Update: 2024-05-17 10:39 GMT

வந்தவாசி காவல் நிலையம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சேதாரக் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் சென்னையில் வழக்கறிஞராக உள்ளார். இவர் கடந்த 12ஆம் தேதி வந்தவாசி நகரம் தேரடி பகுதிக்கு பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது தெற்கு காவல் உதவி ஆய்வாளர் ராமு தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அங்கு செம்பூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மூன்று நபர்களுடன் பைக்கில் வந்ததால் காவல்துறையினர் அவர்களை மடக்கி வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்ததாக  கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த வழக்கறிஞர் பாலமுருகன் மணிகண்டனுக்கு ஆதரவாக காவல் உதவி ஆய்வாளர் ராமுவிடம் வாக்குவாதம் செய்தாராம்.  மேலும் காவல் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து அவரது சட்டையை பிடித்து இழுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல்நிலையத்தில் துணை ஆய்வாளர் ராமு புகார் செய்துள்ளார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் லட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.  மேலும் பாலமுருகனை தேடி வந்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணாவரம் பூட்டு சாலை அருகே பாலமுருகன் இருப்பதாக கடந்த 13ஆம் தேதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது எனவே தெற்கு போலீசார் அங்கு சென்று பாலமுருகனை கைது செய்ய முயன்றனர்.

அப்போது போலீசாரை ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. எனவே காவல்துறையினரும் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து பாலமுருகனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் பாலமுருகனை காவல்துறையினர் தாக்குவது போன்ற வீடியோ வந்தவாசியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர்  ராமு மற்றும் காவலர்கள் எல்லப்பன்,  ராமதாஸ்,  செந்தில்குமார் ஆகிய நான்கு பேரை இடமாற்றம் செய்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.


Tags:    

Similar News