வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டம்
வந்தவாசியில் குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் 3, 6, 11 மற்றும் 24-வது வார்டுகளில் குப்பைகள் சரிவர அகற்றப்படாததால், பல நாட்களாக குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவியது.
குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து அந்தப் பகுதி பொதுமக்கள் தாங்கள் சேகரித்த குப்பைகளுடன் வந்தவாசி நகராட்சி அலுவலகத்துக்கு வந்து நகராட்சி ஆணையாளர் ராமஜெயம், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் பாண்டி ஆகியோர் முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில், குப்பைகள் அகற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டியவுடன் துர்நாற்றம் வீசியதால் பணியாளர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர்.