திராவிட கட்சிகளால் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை: அன்புமணி ராமதாஸ்

55 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகளால் மக்கள் வாழ்வில் முன்னேற்றம் இல்லை என வந்தவாசியில் அன்புமணி ராமதாஸ் பேச்சு

Update: 2022-04-25 06:00 GMT

 பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி

திருவண்ணாமலை கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நேற்று  வந்தவாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். 

சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில், கடந்த 55 ஆண்டுகளாக தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. ஆனால் மக்கள் வாழ்வில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. எனவே இந்த கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நம்மை தேர்ந்தெடுப்பர்.

நமக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது. இதனை தேர்தல் நேரத்தில் வாக்குகளாக நாம் மாற்ற வேண்டும். வருகிற 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி அமைக்கும் என்று கூறினார் 

கூட்டத்தில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆக பிரித்து புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். ஆரணியில் பட்டு பூங்கா அமைக்க வேண்டும்.  போளூர் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.28 கோடியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட செயலாளர்கள் அ.கணேஷ்குமார், ஆ.வேலாயுதம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாலவேடு பாபுவிஜயன், நகர செயலாளர் பேட்டரி வரதன், எம்.டி. செல்வம், மாவட்ட துணை செயலாளர் து.வடிவேல், மேற்கு ஆரனி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சு.ஏழுமலை, கவிதா காமராஜ், கீதா சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டன

Tags:    

Similar News