தனியார் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு: நகரமன்ற உறுப்பினர் சாலை மறியல்

தனியார் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு நடப்பதாக புகார் தெரிவித்து நகரமன்ற உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்.

Update: 2022-05-21 06:28 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட நகரமன்ற உறுப்பினர் ஷீலா, மூவேந்தன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

வந்தவாசி நகர மன்றத்தின் சாதாரண கூட்டம் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமன்ற கூடத்தில் நகர மன்றத் தலைவர் ஜலால் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் முஸ்தாபா துணைத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2-வது வார்டு உறுப்பினர் ஷீலா மூவேந்தன் பேசுகையில், நகராட்சியில் வேலை பார்க்கும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து தினமும் ரூ.10 ஆயிரம் வரை முறைகேடு செய்யப்படுகிறது, என்றார். அதற்கு தலைவர் எச்.ஜலால், மறுப்பு தெரிவித்துப் பேசினார்.

இதை தொடர்ந்து முறைகேட்டை கண்டித்து வெளிநடப்பு செய்த நகரமன்ற உறுப்பினர் ஷீலா மூவேந்தன் நகராட்சி அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அவருடன் விடுதலை சிறுத்தை கட்சி மாநில துணை செயலாளர் மூவேந்தன், நகர இணைச் செயலாளர் விஜய் ஆகியோரும் மறியலில் பங்கேற்றனர்.

அப்போது தனியார் தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் முறைகேட்டை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். வந்தவாசி தெற்கு போலீசார் சமரசம் செய்ததன் பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags:    

Similar News