சேஷாத்ரி சுவாமிகள் மணிமண்டப கும்பாபிஷேக விழா

வந்தவாசி வழுவூர் கிராமத்தில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் மணிமண்டப கும்பாபிஷேக விழா நடைபெற்றது

Update: 2022-04-06 06:44 GMT

சேஷாத்திரி சுவாமிகள் மணிமண்டப கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலையில் யோகியாய், சித்தராய், பித்தராய்  வாழ்ந்த மகான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள். இவரைப்பற்றி அறியாதவர்கள் தமிழ்நாட்டிலே ஏன் உலகம் முழுவதும் இல்லை எனலாம். திருவண்ணாமலை கிரிவலப் பாதை தொடக்கத்தில் அக்னி லிங்கத்திற்கு பக்கத்தில்  இவருடைய மகாசமாதி உள்ளது.

அவருடைய அவதாரத்தலமான வழூரில் எந்த வித நினைவுச் சின்னமும் இல்லையே என்ற குறை சில காலமாக அவருடைய ஆத்மார்த்த பக்தர்கள் உள்ளத்தில் இருந்து வந்தது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் அமையப் பெற்றது தான் மகானுக்கான மகத்தான மணி மண்டபம்.

இங்கு ஏற்கெனவே பழமையான பிரம்மபுரீசுவரர் சிவன் கோயிலும், சுந்தரவதன பெருமாள் கோயிலும், முத்து மாரியம்மன், பொன்னியம்மன் கோயில்களும் உள்ளது. தற்போது ஊருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக மகானின் மணிமண்டபம் அமைந்துள்ளது.  அருகே உள்ள குளத்தின் படித்துறை காமகோடி படித்துறை என்றே அக்காலத்திலிருந்தே அழைக்கப்படுகிறது.

வந்தவாசியை அடுத்த வழுவூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் மணிமண்டபத்தின் மகா கும்பாபிஷேகம் விழா இன்று காலை  பல்வேறு மடாதிபதிகள், ஆதின கர்த்தாக்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. 


இதையொட்டி சுக நதியில் இருந்து புனித நீர் ஊர்வலமாக காமரசவல்லி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்ட பின்னர் புனித நீர் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் சிலையுடன் புறப்பட்ட ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மணி மண்டபத்தை அடைந்து பின்னர் கும்பகோணம் ஸ்ரீ தினகர சர்மா தலைமையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று காலை மணி மண்டபத்தின் கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை மகாலட்சுமி சுப்பிரமணியம், அமெரிக்க தொழிலதிபர்கள் வீரமணி, சென்னை ஆடிட்டர் ரவி, வந்தவாசி டாக்டர் ஸ்ரீதர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்

Tags:    

Similar News