வந்தவாசியில் வனத்துறையை கண்டித்து கிரிவல குழுவினர் ஆர்ப்பாட்டம்
வந்தவாசி பழைய பஸ் நிலையம் எதிரில் வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
வந்தவாசி பழைய பஸ் நிலையம் எதிரில் வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் வெண்குன்றம் கிராமத்தில் 1500 அடி உயரமுள்ள தவளகிரி என்று அழைக்கப்படும் மலை உள்ளது.
மலையில் தவளகிரீஸ்வரர் கோவில் உள்ளது. தவளகிரி மலையில் அடிக்கடி தீ விபத்து நடக்கிறது. இதனால் மலையில் உள்ள மூலிகைச் செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகின்றன. தீவைக்கும் மர்ம நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், மலையை பாதுகாக்கக் கோரியும் அந்தக் கிராமத்தினர் தொடர்ந்து புகார் தெரிவித்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தீ விபத்து தொடர்பாக நடவடிக்கை எடுக்காத வனத்துறையைக் கண்டித்து வந்தவாசி பழைய பஸ் நிலையம் எதிரில் தவளகிரீஸ்வரர் கோவில் கிரிவலக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வெண்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிவேலு தலைமை தாங்கினார். கிரிவலக் குழு செயலாளர் குருலிங்கம் முன்னிலை வகித்தார். கவுரவத் தலைவர் பி.முத்துசாமி, பா.ஜ.க. முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.ஜி.துரை நாடார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் வனத்துறையைக் கண்டித்தும், மலைக்கு நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யக் கோரியும் முழக்க மிட்டனர். அதில் இந்து முன்னணி முன்னாள் மாவட்ட செயலர் சுரேஷ், எழிலரசன் மற்றும் ரமேஷ், கன்னியப்பன், ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் பா.ஜ.க. முன்னாள் தொகுதி பொறுப்பாளர் நவநீதன் நன்றி கூறினார்.