வந்தவாசியில் ஜமாபந்தி நிறைவு: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வந்தவாசியில் ஜமாபந்தி நிறைவு விழாவில் கூடுதல் ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Update: 2024-06-29 02:26 GMT

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சார் ஆட்சியர்  பல்லவி வர்மா

வந்தவாசியில் ஜமாபந்தி நிறைவு விழாவும், விவசாயிகள் மாநாடும் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், 1433- ஆம் ஜமாபந்தி நிறைவு விழாவும், விவசாயிகள் மாநாடும், வருவாய் தீர்வாய அலுவலரும், செய்யாறு சார் ஆட்சியருமான பல்லவி வர்மா தலைமையில் நடைபெற்றது.

வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமி அனைவரையும் வரவேற்றார். வட்டதுணை ஆய்வாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 170 பயனாளிகளுக்கு 4 இலட்சத்து 94 ஆயிரத்து 797 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா சிறப்புரையாற்றியபோது,

ஜமாபந்தியில் நிறைய விஷயங்கள் என் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. பட்டா உள்ளிட்டவற்றுக்கு சிறிது அவகாசம் எடுத்து விசாரணை செய்து வழங்கப்படும். இந்த ஜமாபந்தியில் 754 மனுக்கள் பெறப்பட்டு 157 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 567 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. அரசு விதிகளின்படி, சாத்தியப்படும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

பின்பு , பயனாளிகளுக்கு 4 இலட்சத்து 94ஆயிரத்து 797 ரூபாய் மதிப்பீட்டில், 119 நபர்களுக்கு பட்டா மாற்றம்,5 பேருக்கு தமிழ் நில திருத்தம், 6 இதர மனுக்கள், 19 சமூக பாதுகாப்பு திட்ட மனுக்கள், 10 இதர துறை மனுக்கள், 6 குடும்ப அட்டைகள், 5உட்பிரிவு மனுக்களுக்கான திட்ட உதவிகள், உயிர் உரம், மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் விதைகள், நுண்ணூட்ட சத்து, ஆர்கானிக் உரங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், சமூகபாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் தமிழ்மணி, நகர்மன்ற தலைவர் ஜலால், துணைத் தலைவர் அன்னை சீனிவாசன், நகர்மன்ற உறுப்பினர் நூர் முகம்மது, விவசாய சங்க பிரதிநிதிகள் அரிதாசு, ராதா கிருஷ்ணன், அகமது ரிஸ்வான், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செயலாளர் சுரேஷ், வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர் பிரபாகரன் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஜமாபந்தி நிகழ்ச்சியினை வந்தவாசி மண்டல துணை வட்டாட்சியர் ஆனந்தகுமார், தெள்ளாறு மண்டல துணை வட்டாட்சியர் மாரிமுத்து, வட்ட வழங்கல் அலுவலர் சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிறைவாக தேர்தல் துணை வட்டாட்சியர் சதீஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News