இன்ஸ்டாவில் பழகி ஆறே மாதத்தில் இன்ஸ்டன்ட் டும்..டும்..! புகார் அளித்த பெற்றோர் வாழ்த்து..!
இன்ஸ்டாவில் பழகியவரை காதல் திருமணம் செய்த இளம்பெண் பெற்றோர் புகார் அளித்த நிலையில் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.;
இன்ஸ்டாவில் பழகியவரை திண்டுக்கல் இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது பெற்றோர் புகார் அளித்த நிலையில் காதல் தம்பதி வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் நாகமணி மகன் அருண்குமார், இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த துரைஅய்யன் மகள் பொன்னுமணி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த வாரம் திண்டுக்கல்லில் வீட்டில் இருந்த பொன்னுமணியை திடீரென காணவில்லையாம். தொடர்ந்து, அவரது தந்தை திண்டுக்கல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், அவரது செல்போன் தொடர்பை ஆய்வுக்கு உட்படுத்தியதில், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் இருப்பதாக காட்டியது.
உடனடியாக போலீசார் பொன்னுமணியை தொடர்பு கொண்டு திண்டுக்கல் வரவேண்டும், இல்லையென்றால் கைது செய்வோம் என கூறினார்களாம்.
தொடர்ந்து, நேற்று வந்தவாசி மகளிர் போலீசாருக்கு வழக்கு தொடர்பான தகவல்களை கூறியுள்ளனர். அதன்பேரில், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சப்- இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் வெண்குன்றம் கிராமம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, உறவினர் வீட்டில் இருந்த பொன்னுமணி, அருண்குமார் ஆகிய இருவரும் அங்குள்ள கோயிலில் கடந்த 15 ம் தேதி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
திண்டுக்கல்லில் தந்தை புகார் அளித்த நிலையில், திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, திண்டுக்கல் போலீசார் மற்றும் பெண்ணின் தந்தை துரைஅய்யனிடம் தொலைபேசி மூலம் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி பேசினார். அப்போது, இருவரும் திருமணம் செய்து கொண்டதையும், இங்கே பாதுகாப்பாக இருப்பதையும் இன்ஸ்பெக்டர் கூறினார். உடனே துரைஅய்யன், பாதுகாப்புடன் நல்ல முறையில் பார்த்துக் கொண்டால் சந்தோசம் என கூறினாராம்.
தொடர்ந்து, அருண்குமார் குடும்பத்தினர் மருமகள் பொன்னுமணியை நல்ல முறையில் கவனித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்தனர். பின்னர் போலீசார், அருண்குமார் பொன்னுமணி தம்பதியை வெண்குன்றம் கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர். காதல் தம்பதி வந்தவாசி மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.